கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனைவி, குழந்தைகள் மீது மண்எண்ணெய் ஊற்றி 2 பேர் தீக்குளிக்க முயற்சி
வெவ்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2 பேர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, குழந்தைகள் மீதும் தங்கள் மீதும் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் வெவ்வேறு பிரச்சினை காரணமாக இரு தரப்பினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலசபாக்கம் தாலுகா சிங்காரவாடி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். லாரி டிரைவர். இவர் திடீரென நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு லாரியுடன் வந்து தன் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய்யை ஊற்றியதோடு லாரி மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் தண்ணீரை ஊற்றினர்.
வீட்டு பத்திரத்தை வாங்கினர்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையின்போது தனசேகரன் கூறியதாவது:-
நான் லாரி வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினேன். 11 மாதங்கள் தவணை தொகை கட்டிய நிலையில் கொரோனா ஊரடங்கினால் போதிய வருவாயின்றி தவித்தேன். கடன் நிலுவைக்காக நிதி நிறுவனத்தினர் எனது வீட்டு பத்திரத்தை வாங்கிக்கொண்டு 6 மாதத்தில் பணத்தை கொடுத்தால்தான் அதனை தருவோம் என வாங்கி சென்றனர்.
பத்திரத்தை பல முறை திரும்ப கேட்டும் அவர் அதை தரவில்லை. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மன உளைச்சலில் தீக்குளிக்க முயற்சி செய்தேன்” என்றார்.
பின்னர் அவரை போலீசார் லாரியுடன் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு செல்லும்படி கூறினர். பின்னர் அவர் லாரி மீது ஏறி லாரியின் டிரைவர் சீட்டில் அமர்ந்து அங்கு செல்ல மாட்டேன் என்று ‘திடீர்’ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்து போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆக்கிரமித்து மிரட்டல்
அதேபோல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தண்டராம்பட்டை அடுத்த எடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பூமணி (36) என்பவர் திடீரென அவர் மீதும், மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவர்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் விசாரணையில் பூமணி கூறுகையில், “எனது அனுபவத்தில் இருந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கொண்டு மிரட்டுகின்றனர். எனவே அனுபவித்து வரும் இடத்தை மீட்டுத்தர வேண்டும்” என்றார். பின்னர் அவர்களிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரடியாக மனுவை பெற்று கொண்டு விசாரணை நடத்துவதாக கூறினார். அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story