அய்யனார் ஊத்து கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் மின்மீட்டர் உடைப்பு; ஒயர்கள் சேதம் - மர்மநபர்கள் அட்டூழியம்


அய்யனார் ஊத்து கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் மின்மீட்டர் உடைப்பு; ஒயர்கள் சேதம் - மர்மநபர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 4 Nov 2020 3:30 AM IST (Updated: 3 Nov 2020 11:45 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகிலுள்ள அய்யனார் ஊத்து கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் மின் மீட்டரை உடைத்து ஒயர்களை சேதப்படுத்தி, குப்பையில் வீசி மர்மநபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.

கயத்தாறு, 

கயத்தாறு அருகிலுள்ள அய்யனார்ஊத்து பஞ்சாயத்தில் புதிதாக பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் மற்றும் சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த அலுவலக கட்டிடங்களிலுள்ள மின்மீட்டர் பெட்டிகள் மற்றும் ஒயர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தியதுடன், அதனை உடைத்து எடுத்து அருகிலுள்ள குப்பை கிடங்கில் தூக்கி வீசியுள்ளனர். மேலும் அங்கு இரும்பு கேட்டுகளுக்கு உட்புறத்தில் காலி மதுப்பாட்டில்கள் வீசப்பட்டு இருந்தன. மதுபோதையில் மர்ம நபர்கள் அலுவலக பகுதியில் ஏராளமான கற்களையும் வீசிச்சென்றுள்ளனர். அந்த கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

நேற்று காலையில் அலுவலகத்திற்கு வந்த ஊராட்சி செயலர் அய்யனார் இந்த சம்பவங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் பஞ்சாயத்து தலைவர் சண்முகையாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் பஞ்சாயத்து அலுவலக பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். மேலும் இந்த சம்பவங்கள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் மதுபோதையில் புகுந்து இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story