திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’ உயர்வு - கிலோ ரூ.60-க்கு விற்பனை


திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’ உயர்வு - கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Nov 2020 3:30 AM IST (Updated: 4 Nov 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திசையன்விளை,

திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது வட மாநிலங்களில் பெய்த மழை காரணமாக அங்கு முருங்கை விளைச்சல் இல்லை. முருங்கை வறட்சி பயிர். அதற்கு வெயில் அதிகம் தேவை. தற்போது வட கிழக்கு பருவ மழை தாமதம் ஏற்பட்டுள்ளதால் இங்கு வெயில் அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் அனைத்தும் காயாகி உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டது. அப்போது அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியும் இந்த பகுதியில் பருவமழை பெய்யவில்லை. கடும் வெயில் அடிக்கிறது.

இதனால் திசையன்விளை முருங்கைக்காய் மொத்த விலை மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பருவ மழை மேலும் தாமதம் அடைந்தால் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story