மயிலாப்பூர் கணவன்-மனைவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: சொத்துக்காக விஷம் கொடுத்து கொன்று விட்டு நாடகமாடிய உறவுப்பெண் கைது


மயிலாப்பூர் கணவன்-மனைவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: சொத்துக்காக விஷம் கொடுத்து கொன்று விட்டு நாடகமாடிய உறவுப்பெண் கைது
x
தினத்தந்தி 4 Nov 2020 4:15 AM IST (Updated: 4 Nov 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மயிலாப்பூரில் கணவன்-மனைவி கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக சொத்துக்காக விஷம் கொடுத்து கொன்று விட்டு நாடகமாடிய உறவுப்பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியில் வசித்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி பெயர் மீனாட்சி. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. பூ மொத்த வியாபாரம் செய்தனர். இவர்களுக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது. கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இவர்களது சொத்துகளை அபகரிக்க மீனாட்சியின் உறவினர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள்.

கொஞ்சம், கொஞ்சமாக கொல்லக்கூடிய விஷத்தை தர்மலிங்கத்துக்கும், அவரது மனைவி மீனாட்சிக்கும் கொடுத்து விட்டனர். தர்மலிங்கத்துக்கு மதுவிலும், மீனாட்சிக்கு சாப்பாட்டிலும் விஷத்தை கலந்து கொடுத்ததாக தெரிகிறது. விஷத்தால் தாக்கப்பட்டு, இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி தர்மலிங்கம் பரிதாபமாக இறந்தார். 13-ந் தேதி அன்று மீனாட்சி உயிரை விட்டார். இவர்கள் சாவில் மர்மம் இருப்பதாக மீனாட்சியின் அக்காள் லதா கொடுத்த புகார் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தர்மலிங்கம் மற்றும் மீனாட்சி ஆகியோரின் பிரேத பரிசோதனையில் அவர்கள் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதையொட்டி மீனாட்சியின் தங்கை மைதிலி, அவரது கணவர் பிரவீன்குமார், மகன் சரவணன் ஆகியோரும், விஷம் வாங்கி கொடுத்த மைதிலியின் நெருக்கமான தோழர் பாலமுருகனும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கின் புகார்தாரர் லதா மீதும் சந்தேகம் இருந்தது. அவர் கொலை செய்யப்பட்ட மீனாட்சியின் அக்காள் ஆவார். அவர் தான் தர்மலிங்கம், மீனாட்சி தம்பதியினரின் சொத்துகளை தற்போது நிர்வகித்து வந்தார்.

சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த வழக்கில் புகார்தாரர் போல நாடகமாடி, கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் லதா தான் (வயது 40) என்று கண்டறியப்பட்டது. அதன் பேரில் லதா நேற்று கைது செய்யப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறினார்கள்.

Next Story