கலபுரகி டவுனில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கலபுரகி டவுனில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கலபுரகி,
கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா கசஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்க ஷெட்டி(வயது 53). இவர் தனது குடும்பத்தினருடன் கலபுரகி டவுன் கைலாஷ்நகர் பகுதியில் வசித்து வந்தார். மேலும் கடக்கஞ்சி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவலிங்க ஷெட்டி தனது மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று இருந்தார். நள்ளிரவில் அவர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். வீட்டின் முன்பு சிவலிங்க ஷெட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
அப்போது அவரது வீட்டின் அருகே மறைந்து இருந்த மர்மநபர்கள் திடீரென வெளியே வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சிவலிங்க ஷெட்டியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
சிவலிங்க ஷெட்டி உயிரிழந்ததை உறுதி செய்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது சிவலிங்க ஷெட்டி பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி அறிந்ததும் ராகவேந்திரா நகர் போலீசார் அங்கு சென்று சிவலிங்க ஷெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிவலிங்க ஷெட்டியை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ராகவேந்திரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story