‘குரோர்பதி’ நிகழ்ச்சியில் இந்துக்களின் உணர்வை புண்படுத்திய நடிகர் அமிதாப் பச்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. போலீசில் புகாா்


‘குரோர்பதி’ நிகழ்ச்சியில் இந்துக்களின் உணர்வை புண்படுத்திய நடிகர் அமிதாப் பச்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. போலீசில் புகாா்
x
தினத்தந்தி 4 Nov 2020 3:45 AM IST (Updated: 4 Nov 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

குரோர்பதி நிகழ்ச்சியில் இந்துக்களின் உணர்வை புண்படுத்திய நடிகர் அமிதாப் பச்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. போலீசில் புகார் அளித்து உள்ளாா்.

மும்பை,

நடிகர் அமிதாப் பச்சன் கே.பி.சி. என அழைக்கப்படும் பிரபல டி.வி. நிகழ்ச்சியான ‘கோன் பனேகா குரோர்பதி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சமீபத்தில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன், நடிகர் அனுப் சோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்துக்கான கேள்வியில், 1927-ம் ஆண்டு சட்டமேதை அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த நூலை எரித்தனர் என கேட்கப்பட்டு இருந்தது. மேலும் அதற்குரிய விடைகளாக ஏ). விஷ்ணு புராணம், பி). பகவத் கீதை, சி). ரிக் வேதம், டி). மனுஸ்மிருதி என கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த கேள்விக்குரிய சரியான விடை மனுஸ்மிருதி ஆகும்.

இதில் போட்டியாளர்கள் விடை கூறிய பிறகு பேசிய நடிகர் அமிதாப் பச்சன், 1927-ம் ஆண்டில் அம்பேத்கர் சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமையை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்திய பண்டைய இந்து நூலான மனுஸ்மிருதியை கண்டித்து அதன் நகலை எரித்தார் என கூறினார்.

இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பான பிறகு குறிப்பிட்ட அந்த கேள்வி இந்துக்களின் உணர்வை புண்படுத்தியதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சி இடதுசாரி கொள்கையுடன் நடத்தப்படுகிறது என்றும் கூறியிருந்தனர். இதற்காக நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சோனி டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மராட்டியத்தை சேர்ந்த ஆவ்சா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. அபிமன்யு பவார் லாத்தூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட கேள்விக்குரிய விடையில் 4 பதில்களும் இந்து மத நூலாகவே உள்ளது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்று புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.

மேலும் இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்துக்களை அவமதிக்கும் முயற்சிகள் நடந்து உள்ளது. மேலும் ஒற்றுமையுடன் வாழும் இந்து, புத்த மத மக்கள் இடையே பிரச்சினைகளை கிளப்பும் முயற்சிகள் நடந்து இருக்கிறது” என கூறியுள்ளார்.

Next Story