சிரா, ஆர்.ஆர்.நகர் தொகுதிகள் இடைத்தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவானது - 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது


சிரா, ஆர்.ஆர்.நகர் தொகுதிகள் இடைத்தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவானது - 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது
x
தினத்தந்தி 4 Nov 2020 3:45 AM IST (Updated: 4 Nov 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா, ஆர்.ஆர்.நகர் தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 10-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

பெங்களூரு,

துமகூரு மாவட்டம்சிரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யநாராயணா.

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். காங்கிரசை சேர்ந்த முனிரத்னா (ராஜராஜேஸ்வரிநகர்) ஒரு ஆண்டுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் சிரா, ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்) ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த 2 தொகுதிகளுக்கும் 3-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் முக்கியமாக சிரா தொகுதியில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராஜேஸ்கவுடா, காங்கிரஸ் சார்பில் டி.பி.ஜெயச்சந்திரா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் அம்மஜம்மா ஆகியோர் உள்பட 15 வேட்பாளர்களும், ஆர்.ஆர்.நகரில் பா.ஜனதா சார்பில் முனிரத்னா, காங்கிரஸ் சார்பில் குசுமா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் கிருஷ்ணமூர்த்தி உள்பட 16 பேரும் களத்தில் உள்ளனர். இதில் 6 பேர் பெண்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் வாக்காளர் களின் வசதிக்காக 1,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 6 லட்சத்து 77 ஆயிரத்து 926 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்களாக இருந்தனர். இந்த நிலையில் திட்டமிட்டப்படி கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா பீதிக்கு மத்தியில் வயதானவர்கள், இளைஞர்கள், இளம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வந்து வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

ஆர்.ஆர்.நகரில் உள்ள ஜே.பி.பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அந்த தொகுதியில் யஷ்வந்தபுராவில் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் காங்கிரஸ் மகளிர் அணியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதை அங்குள்ள ஒருவர் தனது செல்போன் கேமராவில் வீடியோ எடுக்க முயற்சி செய்தார். அதை அந்த மகளிர் அணியினர் பறிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.ஆர்.நகரில் நடிகர் தர்ஷன், நடிகை அமுல்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர். ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களித்தனர். அவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர தேர்தல் அதிகாரிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி அழைத்து வந்தனர். அவர்கள் உடல் கவச உடைகள் அணிந்து வந்து வாக்களித்தனர்.

அதே போல் சிரா தொகுதியிலும் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இரு தொகுதிகளிலும் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அதாவது வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. தேர்தல் அலுவலர்கள் முகக்கவசம், கையுறை அணிந்திருந்தனர்.

வாக்காளர்கள் சமூக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டிருந்தனர். முகக்கவசம் அணிந்து வந்த வாக்காளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆர்.ஆர்.நகரில் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே நேரத்தில் சிராவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிகபட்சமாக சிரா தொகுதியில் 82.31 சதவீதமும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 45.24 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஓட்டுமொத்தமாக இந்த இடைத்தேர்தலில் 63.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

Next Story