திருச்சி புத்தூரில் ரூ.20¼ கோடியில் விறுவிறுப்பாக நடக்கும் நவீன வணிக வளாகம் கட்டும் பணி
திருச்சி புத்தூர் மீன்மார்க்கெட் காலியான இடத்தில் ரூ.20¼ கோடி செலவில் நவீன வணிக வளாகம் கட்டுமானப்பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருச்சி,
திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பகுதியில் மீன் மார்க்கெட் கடந்த 18 ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. தற்போது குழுமணி பிரதான சாலையில் உள்ள காசிவிளங்கி பகுதியில் ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட நவீன மீன்மார்க்கெட்டுக்கு இடமாற்றப்பட்டு கடந்த மாதம் 10-ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
புத்தூர் மீன்மார்க்கெட்டை இடமாற்றம் செய்த பின்னர், அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன வளாக கட்டடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் தரைத்தளத்திற்கு கீழ் ஆழமாக தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் எழுப்பும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. 20- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
2 ஆண்டில் பணி முடியும்
இந்த வணிக வளாகத்தில் தரைத்தளம் 10, 250 சதுர அடியிலும், 3 மேல் தளங்களுடனும் அமைய உள்ளன. 53 கார்கள், 128 இருசக்கர வாகனங்கள் தரைத் தளத்தில் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்படுகிறது. முதல் 2 தளங்களும் சில்லரை விற்பனை கடைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. உணவு பரிமாறும் மற்றும் விழாக்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான அரங்கம் ஆகியவையும் அமைகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நவீன வளாகம் கட்டும் பணிக்கான ஆர்டர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டு விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாகவும், மீன்மார்க்கெட் முழுமையாக காலி செய்யப்படாததாலும் பணிகள் தாமதமானது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் வணிக வளாகத்தை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கு முன்கூட்டியே பணிகளை முடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது’என்றார்.
Related Tags :
Next Story