தஞ்சையில் எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய் பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது
தஞ்சையில் எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை நாய் கடித்து கொன்றது. பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது.
தஞ்சாவூர்,
நாய் நன்றியுள்ள விலங்கு ஆகும். வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மனிதர்களிடம் கூட காணாத குணம் நாயிடம் உண்டு. மேலும் நாயிடம் குறும்பும் அதிகம் உண்டு. சினிமாக்களில் நாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்குவது, தன்னை வளர்த்த எஜமானர்களை, அவர்கள் வீட்டில் உள்ளவர்களை பாம்பு, திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற சம்பவங்கள் இடம் பெற்று இருக்கும். இதே போன்ற சம்பவங்கள் நிஜத்திலும் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு.
தஞ்சையில் தன்னை வளர்த்த எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை ஒரு நாய் கடித்து கொன்றது. மேலும் பாம்பு கடித்ததில் நாயும் இறந்தது.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பாம்பை கொன்றது
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிந்து நகரைச் சேர்ந்தவர் எழில்மாறன்-மாலா தம்பதியினர். இவர்களது வீட்டில் ரியோ, ஸ்வீட்டி என்ற 2 நாய்களை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று வீட்டில் எழில்மாறன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது.
இதனை பார்த்த ரியோ என்ற நாய், பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது. இதில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது. அதே நேரத்தில் பாம்பு கடித்ததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்தது.
இரவில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தூங்கிய எழில்மாறன் தம்பதியினர் மறுநாள் காலை விடிந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாய் ரியோவும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகிலேயே மற்றொரு நாயான ஸ்வீட்டி கண்களில் நீர்வடிந்தபடி சோகத்தில் படுத்திருந்தது.
மற்றொரு நாய் சோகம்
வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, தனது உயிரை விட்டு குடும்பத்தினரை காப்பாற்றிய நாய் ரியோவின் உடலுக்கு மாலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் பால், அரிசி, பூக்களை தூவி தங்களது தோட்டத்திலேயே கண்ணீர் மல்க புதைத்தனர்.
அதனுடன் வாழ்ந்து வந்த மற்றொரு நாயான ஸ்வீட்டி ரியோவின் நினைவாக உணவு ஏதும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்து வருவதாக மாலா தெரிவித்தார்.
Related Tags :
Next Story