தெள்ளாந்திக்கு முறையாக பஸ்களை இயக்க கோரி அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்


தெள்ளாந்திக்கு முறையாக பஸ்களை இயக்க கோரி அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 9:47 AM IST (Updated: 4 Nov 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

தெள்ளாந்திக்கு முறையாக பஸ்களை இயக்க கோரி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல கிராமங்களுக்கு குறைவான அளவு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் சில கிராமங்களில் வழக்கத்தை விட பஸ் போக்குவரத்து குறைவாக உள்ளது. குறிப்பாக பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்திக்கு நாள் ஒன்றுக்கு 8 முறை பஸ்கள் இயக்கப்படும். அதே போல் முறையாக இயக்காமல் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊர் மக்கள் கேட்டபோது கொரோனா அச்சம் காரணமாக பஸ்சில் பயணிகள் குறைவான அளவே பயணம் செய்வதால் வருவாய் குறைந்துள்ளதாகவும், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து முறையாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் மாதம் தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் தெள்ளாந்திக்கு பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

திடீர் போராட்டம்

இந்த நிலையில் தெள்ளாந்தி ஊராட்சி தலைவி கவிதா ரஜினிகாந்த் தலைமையில் பொதுமக்கள் நேற்று நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் தெள்ளாந்திக்கு புறப்பட தயாராக இருந்த பஸ்சை இயக்கவிடாமல் தடுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களுடன் பேசினர். வரும் நாட்களில் தெள்ளாந்திக்கு முறையாக பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story