புஞ்சைபுளியம்பட்டி அருகே மழை சுவர் இடிந்து விழுந்து சிறுமி சாவு
புஞ்சைபுளியம்பட்டி அருகே பலத்த மழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள எரங்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி சந்தியா. இவர் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் மோனிஷா (வயது 6).
நேற்று முன்தினம் எரங்காட்டுப்பாளையம் பகுதியில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதனால் சந்தியா வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டின் மதில் சுவர் ஈரப்பதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வீட்டின் மதில் சுவர் அருகே மோனிஷா அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
சாவு
அப்போது எதிர்பாராத விதமாக மதில் சுவர் திடீரென இடிந்து மோனிஷா மீது விழுந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவள் அலறி துடித்தாள். உடனே அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் செல்லும் வழியிலேயே மோனிஷா பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story