ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5¾ கோடியில் அறிவியல் பூங்கா கட்டுமான பணியை ஆணையாளர் சதீஷ் ஆய்வு
சேலம் பள்ளப்பட்டியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:- பள்ளப்பட்டி அறிவியல் பூங்காவில் சுகாதாரமான பழக்க வழங்கங்களை கையாளுதல், மனித உடல்களில் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் அவை பரவும் விதம் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன.
ராக்கெட் மாதிரிகள்
மாணவ, மாணவிகள் விண்வெளி ஆய்வுகள் சார்ந்த திறனை வளர்த்து கொள்ளும் வகையில், இந்தியாவில் விண்வெளி ஆய்வுகளுக்காக பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் விண்வெளியில் ஏற்படும் சந்திர, சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 30 பேர் அமர்ந்து காணக்கூடிய கோளரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பூங்காவில் சூரியசக்தி மூலம் செயல்படும் வானொலி சாதனம், ஒளி அலைகளின் இயக்க முறைகள், கியர் ரெயில்கள் உள்ளிட்ட 18 வகையான அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் செயல்முறை விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த பூங்காவில் கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் டைனோசர் போன்ற அரிய விலங்குகள் தொடர்பான தகவல்களுடன் அவற்றின் மாதிரிகள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, உதவி பொறியாளர்கள் அன்புசெல்வி, பாலசுப்பிரமணியம் மற்றும் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story