கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி நகராட்சி ஊழியர் பலி


கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி நகராட்சி ஊழியர் பலி
x
தினத்தந்தி 4 Nov 2020 5:47 PM IST (Updated: 4 Nov 2020 5:47 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி நகராட்சி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட குயின்ட் பகுதியைச் சேர்ந்த பாலுசாமி (வயது 56). இவர் கூடலூர் நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

மேலும் ஓவேலி பகுதியில் செல்போன் அலைவரிசை சேவை முழுமையாக தடைபட்டு உள்ளதால் பாலு சாமியின் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர் எங்கு சென்றார் என தெரியாமல் உறவினர்கள் தவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் தேயிலை தோட்டத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காட்டு யானை தாக்கி பாலுசாமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நியூ ஹோப் போலீசார் மற்றும் ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பாலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு வசதி இல்லாததால் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு பொதுமக்கள் உயிர் இழக்கும் சூழ்நிலை நிலவுகிறது என ஓவேலி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் கூறினர்.

கூடலூர் வனக் கோட்டத்தில் நடப்பு ஆண்டில் காட்டு யானைகள் தாக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story