வரதட்சணை கேட்டு கொடுமை: திருமணமான 2 மாதத்தில் பெண் அதிகாரி தற்கொலை கணவர்-மாமியார் கைது


வரதட்சணை கேட்டு கொடுமை: திருமணமான 2 மாதத்தில் பெண் அதிகாரி தற்கொலை கணவர்-மாமியார் கைது
x
தினத்தந்தி 4 Nov 2020 11:00 PM IST (Updated: 4 Nov 2020 7:01 PM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான 2 மாதத்தில் கூட்டுறவுத்துறை பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானங்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுசிதா கிருபாலினி (வயது 25). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைப்பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும், கடலூர் அடுத்த எம்.புதூரை சேர்ந்த சிவநாதன் மகன் என்ஜினீயர் சந்தோஷ்குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் ஒரு கார், 45½ பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை சந்தோஷ்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சந்தோஷ்குமார், அவரது தாய் இந்திரா(50) மற்றும் குடும்பத்தினர் சுசிதா கிருபாலினியிடம், பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர், ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு சுசிதா கிருபாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு வந்து, அங்கு இறந்து கிடந்த சுசிதா கிருபாலினியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுசிதா கிருபாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சுசிதா கிருபாலினியின் உறவினர்கள் ஏராளமானோர் கடலூர் அரசு மருத்துவமனையின் பிணவறை முன்பு ஒன்று திரண்டனர்.

இது குறித்து அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று, பிணவறை முன்பு ஒன்று திரண்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆறுமுகம், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுசிதா கிருபாலினியின் தற்கொலைக்கு காரணமான சந்தோஷ்குமார், இந்திரா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் சுசிதா கிருபாலினிக்கு திருமணமாகி 2 மாதமே ஆவதால், அவரது சாவுக்கான காரணம் குறித்து கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரனும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வரதட்சணை கொடுமையால் கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story