காரியாபட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்


காரியாபட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 9:05 PM IST (Updated: 4 Nov 2020 9:05 PM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே உள்ள கணக்கனேந்தல் கிராமத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் கணக்கனேந்தல் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தாமிரபரணி குடிநீர் வழங்காததால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த கிராமத்தை சுற்றி எங்கு போர்வெல் அமைத்தாலும் உப்பு தண்ணீர் தான் இருந்து வருகிறது. இதனால் அரசு மூலம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த குடிநீர் ஒரு சில நாட்கள் மட்டுமே வந்தது. பின்னர் தண்ணீர் வராததால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஜோகில்பட்டி கிராமத்தில் தண்ணீர் பிடித்து குடித்து வந்தனர். நடந்து செல்ல முடியாதவர்கள் தங்கள் ஊருக்கு வரும் தண்ணீர் வண்டி மூலம் ஒரு குடம் ரூ.10 கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கணக்கனேந்தல் கிராம மக்கள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி காலிகுடங்களுடன் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரைவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கவில்லை என்றால் காரியாபட்டி யூனியனின் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் எனவும் பெண்கள் கூறினர்.

இதுகுறித்து காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியவதி (கிராம ஊராட்சி) கூறியதாவது:- தாமிரபரணி குடிநீர் வழங்காதது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் தாமிரபரணி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Next Story