தென்காசியில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் - ஊதிய உயர்வை ரத்து செய்து பிறப்பித்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தல்
தென்காசியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி,
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 22-1-2019 முதல் 30-1-2019 வரை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்றுவந்த ஊக்க ஊதிய உயர்வினை ரத்து செய்து பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஆசிரியர் பணிநியமன வரம்பை 40 ஆக குறைத்து அரசிதழில் வெளியிட்டு உள்ள விதி திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். பல்வேறு சூழ்நிலைகளால் முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்று உள்ள ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்கி ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெறுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு தளர்வில் பள்ளிகள் திறக்கப்படும் முன்பு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். மேலும் கலந்தாய்வில் கலந்துகொள்ள மூன்று ஆண்டு என்ற நிபந்தனையை ஓராண்டுக்கு முன்பு இருந்ததை போன்று தளர்த்தி நடத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் தளவாய், மாவட்ட மகளிரணி செயலாளர் செந்தாமரைச் செல்வி, தென்காசி கல்வி மாவட்ட பொருளாளர் வைகுண்டசாமி, தலைவர் ஜான்சன் கால்டுவெல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆசீர் சார்லஸ் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் மனோகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் பிச்சைக்கனி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராஜ்குமார், அனைத்து வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராஜா, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முருகையா, சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் காளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story