சென்னை வியாசர்பாடியில் இரும்பு வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
வியாசர்பாடியில் இரும்பு வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளைபோனது.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வருபவர் ஜோசப் செல்வராஜ் (வயது 57). இவர் வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு ஒரே மகன். அவருக்கு கடந்த மாதம் திருமணம் ஆனது. மகன்-மருமகள் ஆகியோருடன் ஷர்மிளா பெங்களூரு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்த ஜோசப் செல்வராஜ், நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு வியாபாரத்தை கவனிக்க சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 50 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
முன்னதாக மர்மநபர்கள் அவரது எதிர்வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஜோசப் செல்வராஜ் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர்.
இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story