நடைபாதையில் படுத்து உறங்கிய ஒரு வயது குழந்தையை கடத்திய கணவன்-மனைவி கைது - ரூ.30 ஆயிரத்துக்கு வாங்க முயன்ற தம்பதியும் பிடிபட்டனர்


நடைபாதையில் படுத்து உறங்கிய ஒரு வயது குழந்தையை கடத்திய கணவன்-மனைவி கைது - ரூ.30 ஆயிரத்துக்கு வாங்க முயன்ற தம்பதியும் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 5 Nov 2020 3:30 AM IST (Updated: 5 Nov 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

நடைபாதையில் படுத்து உறங்கிய 1 வயது குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இந்த குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கு வாங்க முயன்ற தம்பதியையும் போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை மால்வாணியை சேர்ந்தவர் குருவாஸ். இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதிக்கு பபிதா என்ற 1 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் நடைபாதையில் வசித்து வந்தனர். கடந்த 2-ந்தேதி இரவு நடைபாதையில் படுத்து உறங்கினர். அதிகாலை 3.30 மணி அளவில் சுனிதா கண் விழித்து பார்த்தார்.

அப்போது தன்னுடன் படுத்து உறங்கி கொண்டிருந்த குழந்தை பபிதா காணாமல் போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே கணவர் குருவாஸ் உள்பட அக்கம்பக்கத்தினர் குழந்தையை தேடினர். எங்கும் கிடைக்காமல் போனதால் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் படி போலீசார் துரித விசாரணை நடத்தி குழந்தையின் புகைப்படத்தை அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தனர். இந்த விசாரணையில் அந்தேரி ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் ஒரு தம்பதி கடத்தப்பட்ட குழந்தை பபிதாவுடன் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆட்டோவின் பதிவெண் மூலம் டிரைவரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்தேரியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு அவர்களை இறக்கிவிட்டதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.

அங்கு கடத்தப்பட்ட குழந்தையுடன் 2 பெண்கள், 2 ஆண்கள் இருந்ததை போலீசார் கண்டனர். உடனே போலீசார் விசாரணை நடத்தி குழந்தை பபிதாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் கணவன்-மனைவியான ராஜூபவார், ராஷ்மி ஆகியோர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாகவும், குழந்தை இல்லாத தம்பதியான சச்சின், சுப்ரியா ஆகியோர் ரூ.30 ஆயிரத்திற்கு அந்த குழந்தையை வாங்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story