கரூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 வாலிபர்கள் கைது
கரூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில், குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ்ஜெயக்குமார் மேற்பார்வையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் கரூர் அருகே உள்ள பெரியகுளத்துபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த சிலர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதைக்கண்ட போலீசார் அவர்களை சுற்றி வழைத்து பிடித்து, விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்ட பிரபு (28), திருச்சியை சேர்ந்த ஹரிகரன் (25), கரூர் மணவாடியை சேர்ந்த அரவிந்த் (21), கரூர் வையாபுரி நகரை சேர்ந்த பாலாஜி (23) திண்டுக்கல் மாவட்டம், பாளையத்தை சேர்ந்த நேசமணி (32), என்பதும், தொடர் வழிப்பறி உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து உருட்டுக்கட்டை உள்பட பல்வேறு ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story