கஞ்சா, லாட்டரி ஒழிப்பில் போலீசார் முனைப்பு காட்ட வேண்டும் - நாராயணசாமி அறிவுறுத்தல்
புதுச்சேரியில் கஞ்சா, லாட்டரியை ஒழிப்பதில் போலீசார் முனைப்பு காட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
லாஸ்பேட்டை காவல்நிலையத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.3.20 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற் கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா வரவேற்றுப் பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
லாஸ்பேட்டை காவல்நிலையம் 4 தொகுதிகள் சம்பந்தப்பட்டதாக உள்ளது. நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வந்த இந்த காவல் நிலையம் இப்போது மையப்பகுதியில் அமைய உள்ளது. சபாநாயகரின் பெருமுயற்சியால் இது நடந்துள்ளது.
அசோக் நகரில் வசிக்கும் மக்கள் நெடுங்காலமாக பட்டா இல்லாமல் வசித்து வந்தனர். அவர்களுக்கு இப்போது பட்டாவும், பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
நாம் எந்த ஒரு உயர் பதவியில் இருந்தாலும் முதலில் கவனிக்க வேண்டியது தொகுதி மக்களைத்தான். நாங்கள் பதவியேற்றது முதல் சட்டம்-ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இந்தியாவில் உள்ள 17 சிறிய மாநிலங்களில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் புதுச்சேரி முதல் இடத்தில் உள்ளது. கல்வி, சுகாதாரம், சமூகநலம் போன்றவற்றிலும் முதல் இடத்தில் உள்ளோம்.
காவல் துறையினருக்கு எங்களால் முடிந்த அளவுக்கு செய்துள்ளோம். 13-வது மாதத்துக்கான சம்பளம், சீருடை, தேர்தல் பணிக்கான தொகை ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இன்னும் அவர் களுக்கு நிறைய செய்யவேண்டியுள்ளது.
காவல்துறை நவீனமயமாக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக உள்துறை மந்திரியிடம் பேசியுள்ளேன். காவல்துறையினர் கஞ்சா, லாட்டரி போன்றவற்றை ஒழிப்பதில் முனைப்பாக செயல்பட வேண்டும். சிறையில் இருந்து கைதிகள் மிரட்டல் விடுப்பதை தடுக்கவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் 28 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளோம்.
பல்வேறு தொல்லைகளுக்கு இடையில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவை இல்லாமல் இருந்தால் இன்னும் நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருப்போம். எங்கள் அரசின் முதல் கொள்கை மக்கள் நிம்மதியாக இருப்பதும், உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பதும்தான். என்ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நெல்லித்தோப்பு சிக்னல் பகுதியில் நடந்த வட்டிக்கடைக்காரர் கொலை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தோம்.
முத்தியால்பேட்டை பகுதியில் நடந்த 2 கொலைகளில் குற்றவாளியை கைது செய்தோம். ரங்கசாமியின் ஆட்சியில் ரவுடிகள் முதல்-அமைச்சர் அலுவலகத்தில்தான் இருந்தனர். ஆனால் நாங்கள் குற்றங் களை தடுத்து நிறுத்தினோம். காவல்துறை மக்களின் நண்பன் என்பார்கள். இந்த அரசு காவல்துறையின் நண்பன். ரங்கசாமி ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங் களை நாங்கள் நிறைவேற்றினோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், விஜயவேணி, சாமிநாதன், கலெக்டர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story