திருச்சி காந்தி மார்க்கெட்டில் 6 கடைகளில் ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு வியாபாரிகள் போலீசில் புகார்


திருச்சி காந்தி மார்க்கெட்டில் 6 கடைகளில் ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு வியாபாரிகள் போலீசில் புகார்
x
தினத்தந்தி 5 Nov 2020 1:27 AM GMT (Updated: 5 Nov 2020 1:27 AM GMT)

மூடப்பட்ட நிலையில் உள்ள திருச்சி காந்தி மார்க்கெட்டில் 6 கடைகளில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனதாக வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி முதல் மூடப்பட்டது. இதனால் கடந்த 7 மாதங்களாக இங்குள்ள காய்கறி கடைகள், அரிசி, மளிகை, எண்ணெய், நவதானியங்கள், தேங்காய் உள்பட மற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.

மாநகராட்சி நிர்வாகம் காந்தி மார்க்கெட்டின் 6 வாசல்களில் உள்ள கேட்களையும் மூடி விட்டதால் வியாபாரிகள் உள்ளே செல்ல முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது பொருட்களை எடுக்க வேண்டும் என்றால் மட்டும் மாநகராட்சி காவலர்களின் அனுமதி பெற்று உள்ளே சென்று பொருட்களை எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

6 கடைகளில் திருட்டு

காந்தி மார்க்கெட்டின் பிரதான வாசல் அருகிலுள்ள காந்தி சிலையின் பின்புறம் மளிகைக்கடைகள் வரிசையாக உள்ளன. இந்த கடைகளும் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டு தான் உள்ளன. இந்நிலையில் மூடப்பட்ட கடைகளுக்கு வாடகை செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் பாபு என்ற வியாபாரி வாடகை செலுத்துவது தொடர்பான ஆவணங்களை எடுப்பதற்காக நேற்று காலை தனது கடைக்கு சென்றார்.

அப்போது அவரது கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம், துணி பையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சில்லரை நாணயங்களை காணவில்லை. மேலும் எண்ணெய் பாக்கெட்டுகள் உள்பட சில பொருட்களும் திருட்டு போயிருந்தது.

தனது கடையில் திருட்டு போய் இருப்பது பற்றிய தகவலை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகளிடம் பாபு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மற்ற கடைகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது அதே வரிசையில் மேலும் 5 கடைகளில் ஷட்டரை நெம்பியும், பூட்டுகளை உடைத்தும் பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு கடையில் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக உண்டியலில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போய் உள்ளது. இன்னும் மற்ற கடைகளில் மளிகைப் பொருட்களும் திருட்டுப் போய் உள்ளன.

ரூ.1½ லட்சம் பொருட்கள்

இதுதொடர்பாக மளிகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர். அந்த புகாரில் 6 கடைகளில் சில்லரை காசுகள், பணம் மற்றும் பொருட்கள் என்று மொத்தம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டு போன ஒரு கடையின் உள்பகுதியில் இட்லி மற்றும் உணவுப் பொருட்கள் சிதறிக்கிடந்தன. ஒரு கடையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருந்ததற்கான அடையாளம் தெரிந்தது. எனவே 6 கடைகளிலும் கொள்ளை ஒரே நாள் இரவில் நடந்ததா? அல்லது தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் நடந்ததா? என தெரிய வில்லை. காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டி இருப்பது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story