குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்கக்கோரி கழிவுநீர் பானைகளுடன் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்கக்கோரி மயிலாடுதுறையில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள் கழிவுநீர் பானைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நகரில் குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்கக்கோரி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக வாயிலில் கழிவுநீர் கலந்த குடிநீரை பானையில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளரும், முன்னாள் நகரசபை துணை தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, நகரம் முழுவதும் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டிகள் பல இடங்களில் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனை உடனே சீரமைக்க வேண்டும்.
குறிப்பாக கூறைநாடு, திருவிழந்தூர், சேந்தங்குடி, கீழ நாஞ்சில்நாடு உள்பட அனைத்து பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி உடைந்து அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீருக்காக பயன்படுத்தும் அடிபம்பு குழாயில் கலந்து விடுகிறது. பல இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து குளங்கள் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை சீர்செய்ய வேண்டும். நகரம் முழுவதும் குப்பைகளை சேமித்து அங்கேயே தீவைத்து எரிய விடுவதை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
17 பேர் கைது
அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமையன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர்
போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த தர்ணா போராட்டத்தால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story