நாகர்கோவிலில் ‘மசாஜ் சென்டர்’ பெயரில் விபசாரம்; கணவன்-மனைவி கைது
நாகர்கோவிலில் ‘மசாஜ் சென்டர்‘ என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
திங்கள்சந்தை,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது அதிகரித்து உள்ளது. அதைத்தொடர்ந்து போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி பெண்களை மீட்டு, அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகர்கோவில் சுங்கான்கடையில் ‘மசாஜ் சென்டர்‘ என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
2 இளம்பெண்கள் மீட்பு
அதைத்தொடர்ந்து போலீசார் மசாஜ் சென்டரை நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 56), அவருடைய மனைவி ரோசி (54) என்றும், அவர்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டரை நடத்தியதும், அதில் போதிய வருமானம் கிடைக்காததால், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணன்-ரோசி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்த 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபாலகிருஷ்ணன்-ரோசி தம்பதி ஏற்கனவே களியங்காடு பகுதியில் இதே போல் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கிருந்து இங்கு வந்ததும் தெரிய வந்தது.
Related Tags :
Next Story