விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு


விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு
x
தினத்தந்தி 5 Nov 2020 3:56 AM GMT (Updated: 5 Nov 2020 3:56 AM GMT)

விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் விசைத்தறியாளர்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு, 

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் சென்று பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களை சந்தித்து அவர்களிடம் கருத்துகள் கேட்டு மனுக்கள் பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்துக்கான கருத்து கேட்கும் கூட்டம் ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு தி.மு.க. மாநில பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கி, பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்டு அவர்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். குழு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தனி அமைச்சகம்

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்கப்பட்ட மனுவில், ‘விசைத்தறி கூடங்களில் மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய வேண்டும், விசைத்தறிக்கு என தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும். விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் சி.எம்.துளசிமணி, பொன்னையன், முனுசாமி ஆகியோர் கொடுத்திருந்த மனுவில், ‘விவசாயத்துக்கு தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும். மின்சாரத்துறையை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

பட்டியலின நலத்துறை

அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல் கொடுத்திருந்த மனுவில், ‘அருந்ததியர் சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் மற்றும் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். ஈரோட்டில் அம்பேத்கர் முழுஉருவ சிலை வைக்க வேண்டும்.

பட்டியலின மக்களுக்கு மத்திய தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன் உதவிகளை நேரடியாக வழங்க வேண்டும் அரசு ஆவணங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பெயர் மாற்றி பொதுப்படையான பெயரில் பட்டியலின நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

பரிசீலனை

ஜெகஜீவன் ராம் ஜனநாயக மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் எம்.கே.ஆறுமுகம் கொடுத்திருந்த மனுவில், ‘கொங்கு மண்டலத்தில் உள்ள அருந்ததியர்களுக்கு எஸ்.சி.ஏ. உள் இட ஒதுக்கீடு 15 சதவீதமும், தெற்கு, கிழக்கு மண்டலங்களுக்கு 3 சதவீதமும் வழங்க வழிவகை செய்ய வேண்டும். அருந்ததியர், மாதிகா, சக்கிலியர், பொட்டி, பெகடை, மாதாரி, ஆதி ஆந்திராவினர் ஆகிய உட்பிரிவுகளை சாக்கியர் குல வேளாளர் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இதேபோல் ஏராளமானோர் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் தெரி விக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் உரிய பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான கோரிக்கைகள் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்று குழு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் மாநில நிர்வாகிகள் கந்தசாமி, சந்திரகுமார், மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஷ், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முன்னதாக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி வரவேற்று பேசினார். முடிவில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் நன்றி கூறினார்.


Next Story