ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி சாவு எண்ணிக்கை 130 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு,
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் வைரசின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் தினந்தோறும் 80 முதல் 130 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 110 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.
3 பேர் பலி
இதற்கிடையில் நம்பியூர் பகுதியை சேர்ந்த 61 வயது ஆண் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 30-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
இதேபோல் ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 75 வயது ஆண் ஒருவரும், பெருந்துறை பகுதியை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி 75 வயது முதியவர் கடந்த 2-ந்தேதியும், 67 வயது முதியவர் நேற்று முன்தினமும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.
804 பேர் சிகிச்சை
அதே நேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் 70 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுவரை மொத்தம் 9 ஆயிரத்து 736 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 804 பேர் கொரோனாவுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு இருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வைரசின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story