22 மொழிகளை குறைந்த நேரத்தில் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சேவூர் சிறுமி
இந்தியாவில் உள்ள 22 மொழிகளை குறைந்த நேரத்தில் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் சேவூரை சேர்ந்த 3 வயது சிறுமி இடம் பெற்றுள்ளாள்.
சேவூர்,
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே லூர்துபுரத்தில் உள்ள ஓனாய்பாறை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 35). விவசாயி. பட்டப்படிப்பு முடித்து உள்ளார். இவரது மனைவி பெய்சில் (28). இவர்களுக்கு ஆக்னலோகிரேசியல் (6) என்ற மகனும், ஆண்டோனா சோலீக் (3) என்ற மகளும் உள்ளனர்.
இவரது 3 வயது மகள் ஆண்டோனா சோலீக் இந்தியாவில் உள்ள 22 மொழிகளின் பெயர்களை வேகமாகவும், குறைந்த நேரத்திலும் (9 வினாடிகளில்) உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாள். இதற்கு பல்வேறு தரப்பினரும் இந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஞாபக சக்தி
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறியதாவது:-
எங்களது மகள் ஆண்டோனா சோ லீக், 1½ வயது இருக்கும் போதே நாங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும், பேசினாலும் கூர்ந்து கவனித்து வந்தாள். நாளாக நாளாக நாங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க தொடங்கினாள். இது எங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து தமிழ் எழுத்துக்களை (அ, ஆ, இ, ஈ) சொல்லிக்கொடுத்தோம். அதையும் உடனடியாக உச்சரிக்க தொடங்கினாள். தொடர்ந்து குழந்தையின் ஆர்வத்தை பார்த்த எங்களுக்கு ஏதாவது சாதனை படைப்பாள் என எண்ணினோம்.
எனவே இந்தியாவில் உள்ள மாநிலங்களையும், மாநிலத்தின் தலைநகரங்களையும் சொல்லி கொடுத்தோம். இதை நன்றாக புரிந்து கொண்டு நாங்கள் மாநிலத்தின் பெயரை சொன்னால் உடனடியாக அதன் தலைநகரத்தை சொல்வாள். உதாரணமாக தமிழ்நாடு என்று சொன்னால் சென்னை என்று தலைநகரத்தை சொல்வாள். 7 கண்டங்களையும் விரைவாக சொல்வாள்.
மொழிகள்
இதையடுத்து 3 நாட்கள் பயிற்சியில் இந்தியாவில் உள்ள 22 மொழிகளையும் மிக வேகமாகவும், குறைந்த நேரத்தில் சொன்னாள். இது ஏதாவது சாதனை புத்தகத்தில் இடம் பெற காத்திருந்தோம். எதிர்பார்த்ததை போலவே இதற்கு முன்னதாக 3 வயது குழந்தைகளில் எங்களது குழந்தை ஆண்டோனா சோலீக் தான் 9 வினாடிகளில் 22 மொழிகளையும் சொல்லி மத்திய அரசின் இந்திய சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்று உள்ளது.
மேலும் மாதங்கள், நாட்கள், எண்கள், உடல் உறுப்புகள் மிக விரைவாக சொல்லி வருகிறாள். பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்து சாதனைகள் செய்ய முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story