தேசிய தகவல் மையத்துடன் இணைத்ததால் சிக்னல்களில் விதிகளை மீறும் வாகனங்களை 15 நொடிகளில் கண்டறியும் கேமராக்கள்


தேசிய தகவல் மையத்துடன் இணைத்ததால் சிக்னல்களில் விதிகளை மீறும் வாகனங்களை 15 நொடிகளில் கண்டறியும் கேமராக்கள்
x
தினத்தந்தி 5 Nov 2020 8:07 PM IST (Updated: 5 Nov 2020 8:07 PM IST)
t-max-icont-min-icon

தேசிய தகவல் மையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதால் கோவையில் போக்குவரத்து சிக்னல்களில் விதிகளை மீறும் வாகனங்களின் விவரங்கள் 15 நொடிகளில் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை,

கோவை-அவினாசி சாலையில் உள்ள அனைத்து சிக்னல்கள் மற்றும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்பட முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் 164 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் தேசிய தகவல் மையத்துடன்(என்.ஐ.சி.) இணைக்கப்பட்டுள்ளன. இதன் கண்காணிப்பு சர்வர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளது. பிரதான சர்வர் டெல்லியில் உள்ளது.

கோவையில் உள்ள சிக்னல்களில் சிவப்பு நிற விளக்கு எரிந்த பின்னரும் நிற்காமல் செல்லும் வாகனங்கள். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களில் செல்பவர்கள், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் போன்ற விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்களை கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்து கோவை கலெக்டர் அலுவலகம் வழியாக டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்துக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கும்.

இதில் விதிமீறிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்த வாகன உரிமையாளர் பெயர், முகவரி, செல்போன் எண், விதிமீறல் விவரம் ஆகியவற்றை 15 நொடிகளில் கண்டுபிடித்து அபராத சலான் காந்திபுரம், சாய்பாபா காலனியில் உள்ள போக்குவரத்து உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் அதை அந்தந்த போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி அபராதம் வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களின் விவரங்களும் தேசிய தகவல் மையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே கோவையில் உள்ள சிக்னல் கேமராக்கள் தேசிய தகவல் மையத்துடன் இணைக்கப்பட்டன.

இதன் மூலம் கோவையில் வெளிமாநில வாகனங்கள் அல்லது வெளிமாவட்ட வாகனங்கள் இங்கு வந்து விதிமுறைகளை மீறினால் 15 நொடிகளில் கண்டுபிடித்து அபராதம் விதிக்க முடியும். இதன் மூலம் கோவை போலீசாரின் பணி வெகுவாக குறையும். கோவையில் தினமும் விதிமுறைகளை மீறுவதாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்கின்றன. அவற்றில் சில முக்கியமான விதிமுறைகளை மீறும் 1200 வாகனங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story