கண்மாய், குளம், கால்வாய்களில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா? ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவு


கண்மாய், குளம், கால்வாய்களில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா? ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 5 Nov 2020 3:28 PM GMT (Updated: 5 Nov 2020 3:28 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய், குளம், கால்வாய்களில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா? என ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் லதா, மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளர் (பொது) சிந்து, மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (நிலங்கள்) செழியன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சண்முகம், நிலஅளவைப்பிரிவு கண்காணிப்பு அலுவலா் பொன்னழகு மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-

முதல்-அமைச்சா் உத்தரவிற்கு இணங்க, சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இப்பணி மேலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது பெய்து வரும் மழையில் தண்ணீர் சேதாரமின்றி பாசனக்கண்மாய்கள் மற்றும் குளங்களுக்கு வந்து சேருகின்றன. இதனால் விவசாயப்பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

இதேபோல் மேலும் குளங்கள், கண்மாய்கள் மற்றும் பாசனக்கால்வாய், ஏரிகள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என வருவாய்த்துறை அலுவலா்கள் களப்பணி மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவைகளை அகற்றுவதில் சிறப்புக்கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும். வட்டாட்சியா் மற்றும் நிலஅளவைப்பிரிவு அலுவலா்கள் பணியினை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு களை அகற்றி கண்மாய்கள் மற்றும் கால்வாய்களை பாதுகாக்க வேண்டும்.

மழைநீரை சேமிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதனால் விவசாயப்பணிகளுக்கு மட்டுமின்றி குடிநீர், தேவைக்கும் முழுமையாக பயன்பெற முடியும். மேலும் ஒவ்வொரு ஊராட்சிப்பகுதியிலும் கண்மாய் மற்றும் குளம், வரத்துக்கால்வாய் ஆகியவை அரசு அளவீட்டுப்படி சரியாக உள்ளதா? என அனைத்துப்பகுதிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின்போது ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்றி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story