‘உரிமை மறுப்பு சவால்களை வென்று நிற்கும் இயக்கம் தி.மு.க.’ தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
‘உரிமை மறுப்பு சவால்களை வென்று நிற்கும் இயக்கம் தி.மு.க.‘ என்று தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி கூறினார்.
தூத்துக்குடி,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டம் தோறும் ‘தமிழகம் மீட்போம்‘ என்று தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
தி.மு.க. வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 147 இடங்களிலும், தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் 69 இடங்களிலும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேசினார்.
வடக்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.
அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
இயற்கை ஒரு பெரிய சவாலை உலகத்தை நோக்கி வீசி உள்ளது. அதனை தாண்டி இங்கு கொள்கை ரீதியாக சவால்கள் வீசப்படுகிறது. நமக்கு உரிமைகளை மறுத்து சவால்கள் வீசப்படுகின்றன. இயற்கை சவாலாக இருந்தாலும், உரிமை மறுப்பு சவாலாக இருந்தாலும், அனைத்தையும் வென்று நிற்கும் இயக்கம் தி.மு.க.தான்.
தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்று சந்தேகப்படும் அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்சி பொறுப்பையும் தி.மு.க. தலைவரே எடுத்து நடத்த வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் ஜி.எஸ்.டி. வரி வசூலித்து விட்டது. அதனை வேறு செலவுகளுக்கு எடுத்து செலவு செய்து விட்டதாக மத்திய தணிக்கைக்குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன் பிறகும், உரிமைக்காக அ.தி.மு.க. அரசு குரல் எழுப்பவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் ஆளும் கட்சியினர் கவர்னரை வலியுறுத்தாமல் அமைதியாக இருந்தார்கள். தி.மு.க. போராட்டம் நடத்திய பிறகே கவர்னர் கையெழுத்து போட்டார். தமிழக அரசுக்கு வர வேண்டிய உரிமைகளை கூட மீட்டெடுக்க போராட வேண்டிய இயக்கமாக தி.மு.க. உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை பற்றி கூட கவலைப்படாமல் பள்ளிக்கூடங்களை திறக்க அரசு முடிவு செய்தது. ஆனால் தவறு நடக்காமல் தடுக்க வேண்டும் என்ற முன்னெடுப்பை தி.மு.க. எடுத்து உள்ளது. ஆகையால் இங்கு ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பதும், எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதும் தி.மு.க. தான்.
தமிழகத்தில் பா.ஜனதா அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. அதனை அ.தி.மு.க. அரசு தட்டிக் கேட்கவில்லை. மாநில உரிமைகள், மொழி உரிமைகள், அடையாளங்களை மத்திய அரசிடம் அடகு வைத்துக் கொண்டு இருக்கிறது. இவர்கள் செய்யும் தவறை தொடர்ந்து செய்ய, மத்திய அரசு கவசமாக உள்ளது. இந்த கூட்டணியை உடைத்தெடுத்து தமிழகத்தை மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பரமன்குறிச்சியில் நடந்த விழாவில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 3 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தி.மு.க. மூத்த முன்னோடிகள் 619 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக பேசினார்.
மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, பிரம்மசக்தி, பில்லா ஜெகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story