தூத்துக்குடியில், டாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் - 30 சதவீத போனஸ் வழங்க கோரிக்கை
தூத்துக்குடியில், 30 சதவீத போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன், செயல் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் மரகதலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரையறைகளை தளர்த்தி 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் கொரோனா பரவல் காரணமாக பணி நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் குறைந்து உள்ளது. ஆகையால் இந்த பணி நேரத்தை மாற்றாமல் தொடர்ந்து காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியாளர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் கணேசன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story