தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு.
மலைக்கோட்டை,
பள்ளர், குடும்பர், தேவேந்திர குலத்தார், பண்ணாடி, வாதிரியார், காலாடி, கடையர் உள்ளிட்ட 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக அரசாணை வெளியிட வலியுறுத்தியும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட மகளிரணி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் நளினி சாந்தகுமாரி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் பொன்சிலம்பு, திருச்சி மாவட்ட செயலாளர் ஜெயம்ராஜா, மத்திய மாவட்ட தலைவர் குருசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன், அண்ணாசிலை அருகில் உள்ள துறையூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு இருந்த கோட்டை போலீசார் அவர்களை தடுத்துநிறுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 130 பெண்கள் உள்பட 150 பேர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story