புதிய வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக சென்னை தலைமை செயலகம் முன் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக சென்னை தலைமை செயலகம் முன் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் தமிழக ஏரி-ஆற்றுப் பாசன விவசாய சங்க செயற்குழுவில் முடிவு.
திருச்சி,
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் அரவிந்தசாமி வரவேற்றுப்பேசினார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் பூ.விசுவநாதன் கூறியதாவது:-
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது. அதை, தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி சென்னை தலைமை செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. எனவே, மழைநீர் வீணடிக்கப்படாமல் ஏரிகளிலும், அணைகளிலும் சேமிக்கப்பட வேண்டும். மேலும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட வேண்டும். காவிரி, புதுகை, குண்டாறு இணைப்புத்திட்டம் அமைக்கும் பணியினை அரசு விரைவு படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தாமதப்படுத்தாமல் இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story