ராஜஸ்தான், ஒடிசாவை தொடர்ந்து கர்நாடகத்தில் பட்டாசு வெடிக்க தடை? அரசு தீவிர பரிசீலனை
கர்நாடகத்தில் வருகிற 16-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ராஜஸ்தான்,ஒடிசாவை தொடர்ந்து தீபாவளி தினத்தன்று கர்நாடகத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது பற்றி அரசு தீவிர பரிசீலனை நடத்தி வருகிறது.
பெங்களூரு,
நமது நாட்டு கலாசார வழக்கத்தின்படி தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம்.
தீபாவளி பண்டிகை
பட்டாசு வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டு அக்டோபர் 23-ந்தேதியன்று தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.
தீபாவளியை கொண்டாடும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடும் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்திருந்தது.
அதில், தீபாவளி தினத்தன்று பொது இடங்களில் காலை மற்றும் மாலையில் தலா ஒரு மணி நேரம் வீதம் மொத்தம் 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி அந்தந்த மாநிலங்கள் குறிப்பிட்ட நேரங்களில் பட்டாசுகளை வெடிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பட்டாசுகள் வெடிக்க தடை?
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 16-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இருந்த ஆண்டு கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்க மாநில அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே, ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதை பின்பற்றி கர்நாடகத்திலும் பட்டாசுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அத்துறை மந்திரி சுதாகர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த முறை மக்கள் தீபாவளியை எளிமையாக கொண்டாட வேண்டும். தீபம் ஏற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். பட்டாசு வெடிப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் பிரச்சினை உண்டாகும். அதனால் பட்டாசு வெடிக்க தடை விதிக்குமாறு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
நுரையீரல் பாதிப்பு
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்ற சிரா மற்றும் ஆர்.ஆர்.நகர் ஆகிய தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி அந்த 2 தொகுதிகளிலும் அதிகளவில் பரிசோதனை செய்யப்படும். கிராம பஞ்சாயத்து தேர்தலை ஒத்திவைக்குமாறு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்தினால் அது ஒவ்வொரு வீட்டுக்கும் கொரோனாவை அனுப்பி வைத்தது போல் ஆகிவிடும்.
அதனால் அந்த தேர்தலை வருகிற பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்க நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கு 2-வது முறை வைரஸ் தாக்கும்போது, பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. முதல் முறை கொரோனா தாக்கி அதிக பாதிப்புகளை சந்தித்தவர்களுக்கு, 2-வது முறை வைரஸ் தொற்று ஏற்படும்போது, அதன் பாதிப்பு அதிகமாக இருக்காது. இது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மறுவாழ்வு மையம்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 5 சதவீதம் பேருக்கு 2-வது முறை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதனால் ஒருவருக்கு ஒரு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் அவருக்கு பாதிப்பு ஏற்படாது என்று யாரும் நினைக்க வேண்டாம். தடுப்பூசி வரும் வரை அனைவரும் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரி, விக்டோரியா, பவுரிங் ஆகிய ஆஸ்பத்திரிகளில் கொரோனா மறுவாழ்வு மையம் தொடங்கப்படும். அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும் இத்தகைய மறுவாழ்வு மையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story