கர்நாடகத்தில் மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் எடியூரப்பா பேச்சு
கர்நாடகத்தில் மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் முதல்-மந்திரிஎடியூரப்பா பேசினார்.
மங்களூரு,
கர்நாடக பா.ஜனதா கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி எடியூரப்பா, பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு வந்தார். பின்னர் அவர் இரவு மங்களூருவில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று காலை தனியார் ஓட்டலில் நடந்த பா.ஜனதா கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்துக்கு கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமை தாங்கினார். இதையடுத்து இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
3-வது முறையாக மோடி பிரதமர்
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக நளின்குமார் கட்டீல் பொறுப்பேற்ற பின்னர், கட்சி மேலும் வலுப்பெற்றுள்ளது. அவர் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம். நரேந்திர மோடியை 3-வது முறையாக பிரதமராக மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிபடுத்தி உள்ளனர். மக்கள் பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
நாம் பெரும்பான்மை பெறுவதற்கு முன்பு கூட்டணி ஆட்சி எவ்வாறு செயல்பட்டது என்பது நமக்கு தெரியும். கூட்டணி கட்சியில் இருந்து 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களுக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களில் 15 பேர் வெற்றி பெற்றனர். இது தான் நாம் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தது.
காங்கிரஸ் படுதோல்வி
கர்நாடக நாடாளுமன்ற தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட்டு பா.ஜனதா 25 இடங்களை கைப்பற்றியது. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உழைப்பு நினைவில் இருக்கக்கூடியவை. இனி வர இருக்கும் தேர்தல்களை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது என்று தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் கட்சியை பலப்படுத்தி மக்கள் நலனுக்காக செயல்படுவோம். தற்போது பா.ஜனதா மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.
சிரா மற்றும் ஆர்.ஆர்.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் முறையே 40 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த 2 சட்டசபை தொகுதிகள் மற்றும் மேல்சபையில் உள்ள 4 பட்டதாரி மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும்.
கடுமையான சட்டங்கள்
கடலோர மாவட்டங்கள் பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்கிறது. இதனால் இங்கு கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்று யாரும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. மகாத்மா காந்தி நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் மங்களூரு உள்பட 10 நகரங்களுக்கு தலா ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மங்களூரு மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்படும். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் இருப்பதால் அவற்றை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படும். அடுத்த 6 மாதங்களில் நிறைய மாற்றங்களை காணலாம்.
கர்நாடகத்தில் ‘லவ் ஜிகாத்’தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படும். கர்நாடகத்தில் போதைப்பொருள் பழக்கத்தால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கொரோனா கட்டுக்குள் உள்ளது
கர்நாடகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வெளியே வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு விதிக்கும் வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பேசும்போது, எடியூரப்பாவின் பாராட்டுகளை பெற்றது எனக்கு உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. சிரா மற்றும் ஆர்.ஆர்.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். வர இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த தேர்தலில் 80 சதவீதம் இடங்களில் வெற்றி பெறுவோம் என உறுதியளிக்கிறேன் என்றார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, சதானந்தகவுடா, துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், மந்திரிகள் கோட்டா சீனிவாச பூஜாரி, ஈசுவரப்பா, ஆர்.அசோக், மந்திரியும், பா.ஜனதா தேசிய செயலாளருமான சி.டி.ரவி, எம்.பி.க்கள் ஷோபா, பிரதாப் சிம்ஹா, உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story