வெளிமாநிலம், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகம்: நெல் விளைச்சல் அதிகரிப்பால், அரிசி விலை சரிவு
வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு அரிசி வரத்து அதிகமாக உள்ளது. மேலும் நெல் விளைச்சல் அதிகரித்ததன் காரணமாகவும் அரிசி விலை குறைந்தது. ஒரு சிப்பத்துக்கு ரூ.150 வரை குறைந்துள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவு தேவையில் பெரும் பகுதியை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த மாவட்டத்தில் 12½ லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இது தவிர தஞ்சையில் உள்ள அரிசி ஆலைகளுக்கும் அனுப்பப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும்.
அரிசி வரத்து அதிகரிப்பு
தனியார் கொள்முதல் செய்யும் நெல், அரிசி ஆலைகள் மூலம் அரவை செய்யப்பட்டு கடைகளுக்கு அரிசியாக விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெற்றது. அதேபோல் மகசூலும் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவு நெல் விளைந்தாலும் வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி விற்பனைக்கு வரும். வழக்கமாக 20 முதல் 22 சதவீதம் அரிசி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மீதமுள்ள 78 முதல் 80 சதவீதம் வரை அரிசி, வெளி மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது விளைச்சல் அதிகமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரிசி வரத்து அதிகரித்து வருகிறது.
ரூ.150 வரை குறைந்தது
இதன் காரணமாக விலையும் குறைந்து வருகிறது. அதாவது ஒரு சிப்பம் அரிசிக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை விலை குறைந்து காணப்படுகிறது. வழக்கமாக மைசூர் பொன்னி அரிசி குறைந்தபட்சமாக ஒரு சிப்பம் ரூ.750-க்கும், அதிகபட்சமாக ரூ.1500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.(ஒரு சிப்பம் என்பது 25 கிலோ எடை கொண்டது ஆகும்)
தமிழகத்தை சேர்ந்த பொன்னி அரிசி ஒரு சிப்பம் குறைந்தபட்சம் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.1,250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் இட்லி அரிசி எனப்படும் குண்டு அரிசி ஒரு சிப்பம் குறைந்தபட்சம் ரூ.650-க்கும், அதிகபட்சமாக ரூ.1000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
50 சதவீதம் வரத்து அதிகரிப்பு
இதுகுறித்து கீழவாசலில் உள்ள மொத்த அரிசிக்கடை உரிமையாளர் முருகானந்தம் கூறுகையில், “வழக்கமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரிசி 22 சதவீதம் வரை தான் விற்பனைக்கு வரும். தற்போது 50 சதவீதம் வரை விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் அரிசி விலையில் உயர்வு காணப்படும். ஆனால் தற்போது அரிசி விலை இறங்கு முகமாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டும் அதிக அளவு விளைச்சல் நடைபெற்றுள்ளது. இதனால் அரிசி வரத்து அதிகமாக உள்ளது. இதேபோல் வெளி மாநிலங்களிலும் நல்ல விளைச்சல் காரணமாக அரிசி வரத்து அதிகமாக உள்ளதால் பொன்னி அரிசி ஒரு சிப்பத்துக்கு ரூ.100 வரையும், இட்லி அரிசி ரூ.150 வரையும் விலை குறைந்துள்ளது” என்றார்.
Related Tags :
Next Story