வடமதுரை அருகே பரபரப்பு கள்ளக்காதலியை காரில் கடத்த முயற்சி; டிரைவருக்கு தர்மஅடி - போலீசாரை கண்டித்து கிராம மக்கள் மறியல்


வடமதுரை அருகே பரபரப்பு கள்ளக்காதலியை காரில் கடத்த முயற்சி; டிரைவருக்கு தர்மஅடி - போலீசாரை கண்டித்து கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 6 Nov 2020 3:38 PM IST (Updated: 6 Nov 2020 3:38 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே கள்ளக்காதலியை கடத்த முயன்ற டிரைவருக்கு தர்மஅடி விழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போலீசாரை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பெரியகோட்டை அருகே உள்ள கோவகவுண்டம்பட்டி கிராமத்தில் கார் ஒன்று நேற்று வலம் வந்தது. அதன்மீது சந்தேகமடைந்த கிராம மக்கள், அந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரை சேர்ந்த டிரைவர் தாமரைசெல்வன் (வயது 27) என்று தெரியவந்தது. மேலும் அவர், கோவகவுண்டம்பட்டியை சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான 21 வயது இளம்பெண்ணை கடத்தி செல்வதற்காக காரில் வந்திருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தாமரைசெல்வனுக்கு தர்மஅடி கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தாமரைசெல்வனை மீட்டு விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது கோவகவுண்டம்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணை சென்னையில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தாமரைசெல்வனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

அதன்பிறகு பெண்ணின் குடும்பத்தினர், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். இதனையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், அந்த பெண் மீட்கப்பட்டு சொந்த கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது மீண்டும் அந்த பெண்ணை கடத்தி செல்வதற்காக தாமரைசெல்வன் காருடன் அங்கு வந்தபோது கிராம மக்களிடம் சிக்கி கொண்டார் என்றனர்.

இதற்கிடையே தாமரைசெல்வன் மீது நடவடிக்கை எடுக்காமல் அங்கிருந்து போலீசார் அவரை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், இன்ஸ்பெக்டரின் ஜீப்பை சிறைப்பிடித்து சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாமரைசெல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் கிராம மக்கள் தாக்கியதில் தாமரைசெல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவர், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, கள்ளக்காதலியை அழைத்து கொண்டு சென்னைக்கு செல்வது, இல்லையெனில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொள்வது என்ற எண்ணத்தில் தாமரைசெல்வன் கோவகவுண்டம்பட்டிக்கு வந்தது தெரியவந்தது. இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story