கடலூர் அண்ணா மைதானத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் - நடைபயிற்சிக்கு வரும் மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


கடலூர் அண்ணா மைதானத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் - நடைபயிற்சிக்கு வரும் மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Nov 2020 8:11 PM IST (Updated: 6 Nov 2020 8:11 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நடைபயிற்சிக்கு வரும் மக்களுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சியாளர்கள் சங்கம் மூலம் புல் செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், மைதானத்தில் மழைநீர் தேங்காத வகையில் பள்ளமான பகுதிகளில் மணலை கொட்டி சமன்படுத்தவும், உள்விளையாட்டு அரங்கங்களில் உள்ள பழுதுகளை சரி பார்க்கவும் அங்கிருந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் விளையாட்டு திடலில் பூந்தொட்டிகளை வைத்து அழகுபடுத்தி, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் நகராட்சி மூலம் நடைபாதைகளில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என்றார்.

மேலும் விளையாட்டு மைதானத்திற்கு நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள், மைதானத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து தான் மைதானத்திற்குள் வரவேண்டும். சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியவேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மைதானத்தில் ஆங்காங்கே வைக்க வேண்டும் என்றார்.

அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தாசில்தார் பலராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி(பயிற்சி), நடைபயிற்சி சங்கத்தலைவர் பரமசிவன், செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் தமிழ்செல்வன், தேவநாதன், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story