கூட்டுறவுத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா: தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக விளங்குகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


கூட்டுறவுத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா: தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக விளங்குகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 6 Nov 2020 9:22 PM IST (Updated: 6 Nov 2020 9:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக விளங்குவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

கீழ்பென்னாத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா கீழ்பென்னாத்தூர் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு கீழ்பென்னாத்தூரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் சிறுநாத்தூர், வந்தவாசி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தண்டராம்பட்டு உழவர்பணி கூட்டுறவு சங்கத்தில் தலா ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டிடங்கள், கீரனூர், ஆவூர், தண்டரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தலா ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடங்கள், இளங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடம் ஆகியவற்றுக்கான பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.

பின்னர் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு தொகுதி தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எல்.சுப்பிரமணியன் திட்ட விளக்க உரையாற்றினார்.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திருவண்ணாமலை மண்டல கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 16,960 பேருக்கு ரூ.121 கோடியே 35 லட்சம் கடன் உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அவருடைய நிர்வாகத் திறமையால் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 2 கோடி மக்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மின் தட்டுப்பாடு இல்லாமல் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக விளங்குகிறது. தி.மு.க. ஆட்சியில்தான் மின் தட்டுப்பாடு இருந்தது. 10 ஆண்டுகளாக தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. கொரோனா காலத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதை பாராட்டுகிறேன். மீண்டும் 2021-ல் அ.தி.மு.க. ஆட்சியே வரவேண்டும் என்றும், மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியே வரவேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய மாநிலத்தலைவர் அமுதா அருணாச்சலம், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் ராஜா என்ற தேவராஜன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ஓ.சி.முருகன், சி.தொப்பளான், கே.செல்வமணி, கே.வி.ரகோத்தமன், ஆவின் இயக்குனர் தட்சணாமூர்த்தி, திருவண்ணாமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.கே.குமாரசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.மோகன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில் குமரன், முத்துக்குமரன், கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணி, துணைப்பதிவாளர்கள் சரவணன், ஆரோக்கியராஜ், பிரேம், கமலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கே.சாந்தி, நவம்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் குலசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தரி குல சேகரன், ஏ.கே.ஆர்.அருணகிரி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், துணைத்தலைவர்கள், இயக்குனர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி நன்றி கூறினார்.

Next Story