விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தால் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு - சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு
விளாத்திகுளம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் விளாத்திகுளம்-வேம்பார் சாலையில் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியை சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் செல்லும் சாலையில் குமாரசக்கனாபுரம் அருகில் நெடுஞ்சாலைதுறை சார்பில் காட்டாற்றின் குறுக்கே இரண்டு பெரிய புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டுமானம் நடைபெறும் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்தது.
இந்த நிலையில், விளாத்திகுளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகபடியான மழை பெய்து வருவதால், காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், சாலையை மூழ்கடித்து வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதை தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக முற்றிலும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரன்குடி, வேம்பார், சாயல்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிக்கு செல்லும் மக்கள் கிராம சாலை வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக கூடுதலாக 30 கிலோ மீட்டர் சுற்றி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் நேற்று அந்த பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story