கர்நாடகத்தில் மேலும் 1,000 மலிவு விலை மருந்து கடைகள் - மத்திய மந்திரி சதானந்தகவுடா தகவல்
கர்நாடகத்தில் மேலும் 1,000 மலிவு விலை மருந்து கடைகள் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
பெங்களூரு,
மத்திய அரசின் மலிவு விலை கடைகள் மண்டல அலுவலகம் உப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் இருந்தபடி கலந்து கொண்டு அந்த அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 10 சதவீதம் 90 சதவீதம் வரை தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜனரிக் மருத்துவ செயலி உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து கொண்டு, அருகில் உள்ள மலிவு விலை மருந்து கடைகள் குறித்த விவரங்களை பெறலாம். கர்நாடகத்தில் மேலும் 1,000 மலிவு விலை மருந்து கடைகள் திறக்கப்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களின் மருந்துகள் விலை அதிகம். மலிவு விலை மருந்து கடைகளில் இதன் விலை குறைவாக உள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த மலிவு விலை மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளையே நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். பல் பிரச்சினை தொடர்பான மருந்தும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து ஒருவர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் ஆயுர்வேத மருந்துகளும் இந்த கடைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சதானந்தகவுடா பேசினார்.
விழாவில் கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேசுகையில், “இந்த மலிவு விலை மருந்து கடைகளை நடத்த கூட்டுறவுத்துறை ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மருந்து கடைகள் செயல்படுவதற்கு கூட்டுறவுத்துறை முக்கிய காரணம். கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும்“ என்றார்.
Related Tags :
Next Story