முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு பருவ மழையை எதிர்கொள்ள புதுவை அரசு நிர்வாகம் தயார் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு பருவ மழையை எதிர்கொள்ள புதுவை அரசு நிர்வாகம் தயார் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2020 10:45 PM GMT (Updated: 7 Nov 2020 1:10 AM GMT)

பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து துறைகளையும் முழு வீச்சில் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை நெல்லித்தோப்பு தொகுதி மணிமேகலைப்பள்ளி அருகே டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் மழைக் காலம் தொடங்கியுள்ளது. இதனால் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தங்கும். அதில் டெங்குவை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். இது தடுக்கப்பட வேண்டும். எனவே தண்ணீர் தேங்கும் பள்ளமான பகுதிகளில் வசிப்பவர்கள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கடந்த காலங்களில் தனிவார்டு அமைத்துள்ளோம். அதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றினோம். இப்போது பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை என பல்வேறு அரசுத் துறைகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க கூறியுள்ளோம்.

மழைநீர் தேங்கினால் அவற்றை உடனடியாக அகற்ற மோட்டார்களும் தயார் நிலையில் உள்ளது. வருவாய்த்துறை, மீன்வளத்துறை மூலம் மீட்பு நடவடிக்கைகளும் எடுக்க தயார் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டால் 12 மணிநேரத்துக்குள் மின்சாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்ள புதுவை அரசு நிர்வாகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. மக்கள் ஏதாவது உதவி தேவைப்பட்டால் அரசு நிர்வாகத்தை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.வின் வேல் யாத்திரை குறித்த கேள்விக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து கூறுகையில், ‘புதுவையில் எம்மதமும் சம்மதம் என்று மக்கள் வாழ்கின்றனர். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். மதக்கலவரத்தை உருவாக்குவதற்காக வேல் யாத்திரை நடத்துகிறார்கள். புதுவை மக்கள் மதக்கலவரத்துக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். வேல் யாத்திரை மதக்கலவரம் தூண்டும் வகையில் உள்ளதால் அதை அனுமதிக்கக் கூடாது’ என்றார்.

‘கவர்னரை அதிகாரிகள் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்’

அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

சம்பளம் வழங்க கோப்பு அனுப்பினால் பல்வேறு காரணங்களை கூறி அதை கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்புகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதத்துக்கான சம்பளம் வழங்க கையெழுத்திட்டு கோப்பு அனுப்பி உள்ளேன்.

இதேபோல் ஊரடங்கு காலத்தில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கான சாலைவரியை ரத்துசெய்ய கோப்பு அனுப்பினால் அந்த இழப்பினை ஈடுசெய்வது எப்படி? என்று கேள்வி கேட்டு கவர்னர் கிரண்பெடி கோப்பினை திருப்பி அனுப்புகிறார். இதன்காரணமாக வாகன உரிமையாளர்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்னர் செயல்பட்டு வருகிறார். கவர்னரின் தொல்லையால் மக்கள் மத்தியில் கவர்னர் குறித்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். நாம் மக்களுக்காகத்தான் இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்தால்தான் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க முடியும். கவர்னரை அதிகாரிகள் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story