அறந்தாங்கி, பொன்னமராவதி பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி


அறந்தாங்கி, பொன்னமராவதி பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2020 10:54 AM IST (Updated: 7 Nov 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி, பொன்னமராவதி பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

அறந்தாங்கி,

அறந்தாங்கி பழைய ஆஸ்பத்திரி சாலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 49). இவர் புதுக்கோட்டையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பாலசுப்பிரமணியன் புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி வந்து கொண்டிருந்தார். அழியாநிலை என்ற இடத்தின் மீது வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். சம்பவத்தன்று இவர் மேலைச்சிவபுரியில் நடந்த திருமண விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எதிரே மயிலாப்பூர் ஊராட்சியை சேர்ந்த சித்தாண்டி மற்றும் அவரது மகன் விஜயகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது ஏனாதி பாலத்தின் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக 2 பேரின் மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் மயங்கி விழுந்தார். மேலும் சித்தாண்டி, விஜயகுமார் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சித்தாண்டி மற்றும் விஜயகுமாரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story