கிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது


கிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 Nov 2020 6:19 AM GMT (Updated: 7 Nov 2020 6:19 AM GMT)

கிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. பொருளாளரும், தேர்தல் அறிக்கை குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சிறுபான்மையினர், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். மனுக்களை வழங்கியவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து பேசியதாவது:-

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி, அதன் மூலம் வலது, இடதுபுற கால்வாய் அமைத்து, உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரிக்கு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில்வே திட்டத்தை கொண்டுவர வேண்டும். கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்.

ஓசூர் பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு அரசு சார்பில் விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஓசூர் அரசு மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக உயர்த்த வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி அணை பூங்காவை சீர்செய்து, மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்கள். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் டி.செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), ஒய்.பிரகாஷ் (தளி), பி.முருகன் (வேப்பனப்பள்ளி), எஸ்.ஏ.சத்யா (ஓசூர்), முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாநில மகளிரணி தலைவர் காஞ்சனா கமலநாதன், மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம் வெங்கடேசன், நகர தி.மு.க. செயலாளர் நவாப், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story