குற்றவாளிகளுக்கு பரிந்து பேச வேண்டாம் 7 பேர் விடுதலை கோரிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை


குற்றவாளிகளுக்கு பரிந்து பேச வேண்டாம் 7 பேர் விடுதலை கோரிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2020 10:00 PM GMT (Updated: 7 Nov 2020 4:50 PM GMT)

அரசியல் கட்சிகள் குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுவது பண்பாடு ஆகாது என்றும், 7 பேர் விடுதலையை கோர்ட்டு அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் அரங்கில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பான சட்டசபை தீர்மான பரிந்துரைக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

தமிழக அரசு சட்டம் இயற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை கோர்ட்டு தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

7 பேர் விடுதலையை கோர்ட்டு அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.

பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜீவானந்தம், ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது. கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. மற்றும் கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், கே.எஸ்.அழகிரியின் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story