சென்னை கிண்டியில் 80 வயது தாயை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு மகன் தற்கொலை - கவனிக்க ஆள் இல்லாததால் பரிதாபம்


சென்னை கிண்டியில் 80 வயது தாயை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு மகன் தற்கொலை - கவனிக்க ஆள் இல்லாததால் பரிதாபம்
x
தினத்தந்தி 8 Nov 2020 3:45 AM IST (Updated: 8 Nov 2020 12:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் 80 வயது தாயை கவனிக்க ஆள் இல்லாததால், கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு மகனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி சின்னமலை வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 53), கூலி தொழிலாளி. இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆரோக்கியராஜ், திருமணம் செய்து கொள்ளாமல் 80 வயதான தனது தாய் மேரி உடன் வசித்து வந்தார். இவரது தங்கை, மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேரி, வீட்டின் மாடியில் இருந்து இறங்கி வந்தபோது தவறிவிழுந்து விட்டார். இதில் நடக்க முடியாமல் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்தார்.

வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் தாயை கவனிப்பதில் ஆரோக்கியராஜுக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. தன்னாலும் தாயை கவனிக்க முடியவில்லை. வேறு யாரும் கவனிக்க ஆட்கள் இல்லையே என்ற மனவேதனையில் இருந்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக ஆரோக்கியராஜை அக்கம் பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை. நேற்று மாலை ஆரோக்கியராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு தாய், மகன் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. இதனால் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது.

பின்னர் போலீசார் தாய்-மகன் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் வயதான தாயை கவனிக்க முடியாமல் தவித்து வந்த ஆரோக்கியராஜ், தனது தாயை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் அதே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

எனினும் பிரேத பரிசோதனை முடிவில்தான் இருவரது சாவுக்கு உண்மையான காரணங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story