அடுத்த மாதத்துக்குள் ‘அரசு பள்ளிகளில் 7,200 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்’ - நெல்லையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


அடுத்த மாதத்துக்குள் ‘அரசு பள்ளிகளில் 7,200 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்’ - நெல்லையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2020 4:15 AM IST (Updated: 8 Nov 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

‘அடுத்த மாதத்துக்குள் அரசு பள்ளிகளில் 7,200 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்‘ என்று நெல்லையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை சங்கர்நகரில் உள்ள ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இணை இயக்குனர் கோபிதாஸ் வரவேற்றார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் 98 பள்ளிகள், தென்காசி மாவட்டத்தில் 108 பள்ளிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 75 பள்ளிகள், கன்னியாகுமரியில் 55 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கி பேசினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் 2,515 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தை அனைத்து துறை அறிஞர்களும், கல்வியாளர்களும் பாராட்டுகின்றனர். தமிழக பாடத்திட்டத்தை பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பின்பற்றுவதற்காக தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்து விட்டு செல்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் 7,200 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். 80 ஆயிரம் கரும் பலகைகள் ஸ்மார்ட் போர்டுகளாக மாற்றப்படும். மேலும், 828 அதிநவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 3,942 பேருக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 15,497 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நடந்து முடிந்த நீட் தேர்வில் 180 கேள்விகளில் 172 கேள்விகள் தமிழக அரசின் பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளது. இதுவே நமது சிறந்த பாடத்திட்டத்தின் தரத்துக்கு சான்றாகும்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டம் இயற்றி உள்ளார். இதன்மூலம் நடப்பு ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கையில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அரசு பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த ஆண்டு 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவ-மாணவிகள் தனியார் பள்ளியில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பார்த்து அண்டை மாநிலங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்து வருவது அ.தி.மு.க. அரசு தான்.

சேரன், சோழன், பாண்டியன் ஆட்சி காலம்போல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு உறுதுணையாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. பெற்றோரின் கருத்து கிடைத்த பிறகு, பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி தேவி மகராசி உள்பட 17 மாணவ-மாணவிகளுக்கு ரூ.37 லட்சம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா,

எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், சண்முகநாதன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், கல்லூர் வேலாயுதம், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துகுட்டி பாண்டியன், எஸ்.கே.எம்.சிவக்குமார் மற்றும் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் நன்றி கூறினார்.

Next Story