விக்கிரமசிங்கபுரம் அருகே, பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்


விக்கிரமசிங்கபுரம் அருகே, பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 8 Nov 2020 3:45 AM IST (Updated: 8 Nov 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மான், சிறுத்தை, கரடி, மிளா, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்து விடுகின்றன.

விக்கிரமசிங்கபுரம் அருகே மலையடிவார பகுதியான வேம்பையாபுரம், செட்டிமேடு, திருப்பதியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி வரும் சிறுத்தைகள், ஆடுகளை அடித்து கொன்று விடுகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் மலையடிவாரத்தில் இருந்து வந்த சிறுத்தை, வேம்பையாபுரம் நடு தெருவைச் சேர்ந்த துரைகண்ணுவின் வீட்டு வளாகத்தில் உள்ள தொழுவத்தில் புகுந்தது. அங்குள்ள ஒரு ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது.

அப்போது மற்ற ஆடுகள் அலறின. ஆடுகளின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற மருதுபாண்டி மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். உடனே அந்த ஆட்டை போட்டு விட்டு, சிறுத்தை மலையடிவார பகுதிக்கு தப்பி ஓடியது.

பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களில் 7 முறை சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Next Story