சின்னமனூர் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு - காதலிக்கு தீவிர சிகிச்சை


சின்னமனூர் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு - காதலிக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 8 Nov 2020 6:07 AM IST (Updated: 8 Nov 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவர் இறந்துபோனார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மகேஸ்வரன் (வயது 20). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக மகேஸ்வரன் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மலர்கொடி (36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

இதற்கிடையே மலர்க்கொடியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த அவரது கணவர் கண்டித்தார். இருப்பினும் மகேஸ்வரனுடனான கள்ளக்காதலை அவர் விடவில்லை. இதையடுத்து இனிமேல் ஊரில் இருந்தால் தங்களால் சேர்ந்து வாழ முடியாது என எண்ணிய மாணவரும், மலர்கொடியும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்றனர். அங்கு மகேஸ்வரன் தனக்கு தெரிந்த நபரின் வீட்டில் மலர்கொடியுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் பெங்களூருவுக்கு சென்ற நிலையில், அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் அவரவர் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு ஊருக்கு திரும்பி வருமாறு அழைத்தனர். அதன்படி மலர்கொடியும், மகேஸ்வரனும் நேற்று முன்தினம் முத்துலாபுரத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் ஊருக்குள் வராமல், அருகில் உள்ள வெள்ளைக்கரடு என்ற பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றனர். அங்கு 2 பேரும் விஷம் குடித்தனர். இதில் மயங்கி கிடந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். மலர்கொடி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story