சாத்தான்குளம் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் மரண வழக்கு: விசாரணை அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்


சாத்தான்குளம் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் மரண வழக்கு: விசாரணை அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 8 Nov 2020 8:50 AM GMT (Updated: 8 Nov 2020 8:50 AM GMT)

சாத்தான்குளம் வாலிபர் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் ஆகியோர் மரண வழக்கு விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும், சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் கடந்த ஜூன் மாதம் பரிதாபமாக இறந்தனர். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர்.

தந்தை-மகன் இறப்பு சம்பந்தமாக 2 கொலை வழக்கை சி.பி.ஐ. போலீசாரும் பதிவு செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 9 பேர் மீதான குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இதையடுத்து வருகிற 11-ந்தேதி முதல் இந்த கோர்ட்டில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை நடக்க உள்ளது என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தந்தை-மகன் கொலை சம்பவத்தை தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது. இதில் ஏற்கனவே பல்வேறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மகேந்திரன், செல்வன் வழக்கு

இதேபோல சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்ட ராஜாசிங், விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதில் மர்மமாக இறந்ததாக கூறப்படும் சாத்தான்குளம் வாலிபர் மகேந்திரன், தட்டார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் ஆகிய 3 பேர் சம்பந்தப்பட்ட வழக்கையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்குகளையும் மதுரை ஐகோர்ட்டு கண்காணித்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்குகள் விசாரணை சம்பந்தமான இடைக்கால அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு தாக்கல் செய்தனர்.

மேலும், இந்த வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Next Story