லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி: முகமூடி அணிந்து வங்கிக்குள் நடந்து செல்லும் நபர் யார்? போலீசார் விசாரணை


லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி: முகமூடி அணிந்து வங்கிக்குள் நடந்து செல்லும் நபர் யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Nov 2020 2:26 PM IST (Updated: 8 Nov 2020 2:26 PM IST)
t-max-icont-min-icon

பேரையூர் அருகே லாக்கரை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தபோது முகமூடி அணிந்து வங்கிக்குள் நடந்து செல்லும் நபர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர், 

பேரையூர் அருகே சேடப்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது அந்த வங்கியின் கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது. மேலாளர் அறையின் கண்ணாடி கதவுகள், ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. கொள்ளையர்கள் வங்கி லாக்கரை வெல்டிங் வைத்து உடைத்துள்ளனர். மேலும் வங்கியில் இருந்த பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து வங்கி மேலாளர் சேடபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடந்த மாதம் இதே வங்கியில் சுவரை துளைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில் பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வங்கியில் சோதனை செய்த போலீசார் அங்கு இருந்து கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் இருந்த பதிவுகளை ஆய்வு செய்தனர்.

யார் அந்த நபர்?

அப்போது அதில் முகமூடி அணிந்த நபர் வங்கிக்குள் நடந்து செல்வது தெரியவந்தது. மேலும் இந்த கொள்ளை முயற்சியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொள்ளையடிக்க முயன்ற நபர் தான் கொண்டு வந்திருந்த வெல்டிங் எந்திரம் மற்றும் கட்டிங் கருவி ஆகியவற்றை வங்கியின் உள்ளே விட்டுச் சென்றுள்ளான். கொள்ளையில் ஈடுபட்ட நபர் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

கொள்ளையடிக்க முயன்றபோது, சத்தம் கேட்டு மர்ம நபர் தப்பியோடி விட்டார். இதனால் வங்கியில் இருந்த பல கோடி ரூபாய் பணம் மற்றும் லாக்கரில் இருந்த நகைகள் தப்பியது.ஏற்கனவே இரண்டு முறை இந்த வங்கியில் கொள்ளை முயற்சிநடந்துள்ளது. தற்போது 3-வது முறையாக மீண்டும் கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story